அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தில் 007 கதாபாத்திரத்தை யார் ஏற்கப் போகிறார் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை; அதற்கான ஆட்தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது என்று அமேஸான் எம்ஜிஎம் ஸ்டூடியோஸ் தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் நாவலாசிரியர் இயான் பிளெமிங் உருவாக்கிய ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 1962-ல் வெளியான முதல் படம் டாக்டர் நோவில் சீன் கானரி ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்தார்.

பின்னர் ஜார்ஜ் லேஸன்பி, ரோஜர் மூர், திமோத்தி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன், டேனியல் கிரெய்க் ஆகியோர் அந்த வேடத்தை ஏற்றனர். கடைசியாக 2021-ல் டேனியல் கிரெய்க் நடித்த ஜேம்ஸ் பாண்ட் படம் வெளியானது.

உலகளவில் தொடருக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் அடுத்த நடிகர் குறித்து பல்வேறு வதந்திகள் தொடர்ந்து பரவி வருகின்றன. இதற்கிடையில், ஆட்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் விவரங்களை வெளியிடும் திட்டம் இல்லை என்றும், ரசிகர்களுக்கு சரியான தகவலை விரைவில் வழங்க ஆவலாக இருப்பதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

காலும் டர்னர், ஜேகப் எலோர்டி, இத்ரிஸ் எல்பா, ஆரோன் டெய்லர் ஜான்சன், பேட்ரிக் ஜிப்சன் ஆகியோரின் பெயர்கள் ஊடகங்களில் பேசப்பட்டு வருகின்றன. மேலும், அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகரை தேர்வு செய்யும் பணியில் புகழ்பெற்ற ஆட்தேர்வு இயக்குநர் நினா கோல்டு ஈடுபட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.