சீனாவின் உள்நாட்டு மூலதன சந்தையில் இருந்து ரூ.2,400 கோடி நிதி திரட்டும் நோக்கில் பாகிஸ்தான் ‘பாண்டா’ பத்திரம் என்ற பெயரில் கடன் பத்திரத்தை வெளியிட்டுள்ளதாக இஸ்லாமாபாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் உள்ளூர் சந்தையில் வெளிநாட்டு அரசுகள் வெளியிடும் பத்திரங்கள் ‘பாண்டா’ பத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன. சீனாவின் தேசிய அடையாளமாகக் கருதப்படும் பாண்டாவை முன்னிட்டு இந்தப் பெயர் பயன்படுத்தப்படுகிறது.

இந்தப் பத்திரத்திற்கு மூன்று ஆண்டு முதிர்வு காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், 2.5 சதவீத வட்டி விகிதமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீன முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் ரூ.10,000 கோடி அளவில் கோரிக்கை வந்ததாகவும், இது திட்டமிட்ட தொகையை விட ஐந்து மடங்கு அதிகம் எனவும் கூறப்படுகிறது.

இந்த பத்திர வெளியீடு ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் ஆதரவுடன் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில் பங்கேற்க பாகிஸ்தான் நிதி அமைச்சர் முஹமது அவுரங்கசீப் சீனா சென்றார்; இந்த வெற்றி இரு நாடுகளுக்கிடையிலான நிதி ஒத்துழைப்பு வலுவாக இருப்பதை காட்டுவதாக அவரது ஆலோசகர் கூறினார்.