சென்னை: அ.தி.மு.க பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி, கட்சியின் பொதுக்குழுவை கூட்டுவதற்காக கையெழுத்திடும் நடவடிக்கைகளில் நிர்வாகிகள் யாரும் ஈடுபட வேண்டாம் என ஆதரவாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றி கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. பழனிசாமி தரப்பில் 22 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகவும், இதனால் அ.தி.மு.க-வில் பிளவு தீவிரமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு தரப்பினரும் தாங்கள் நியமித்த சட்டசபை கட்சி தலைவர் மற்றும் கொறடாவை அங்கீகரிக்க வேண்டும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் கடிதங்கள் அளித்துள்ளனர்.

இந்த சூழலில், வேலுமணி தரப்புக்கு சென்றதாக கூறப்படும் 11 எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலரை மாவட்ட செயலர் பொறுப்பிலிருந்து நீக்கி, புதியவர்களை பழனிசாமி நியமித்துள்ளார். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவு நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்; இதில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வேலுமணி தரப்பினர் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய செயலர்களிடம் பொதுக்குழுவை கூட்ட கையெழுத்து சேகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், அதில் கையெழுத்திட வேண்டாம் என்றும், எதிர்தரப்பு கையெழுத்து பெறுவதைத் தடுக்கவும் பழனிசாமி கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சபாநாயகர் பழனிசாமியை சட்டசபை கட்சி தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கொறடாவாகவும் அங்கீகரிக்காவிட்டால் உயர் நீதிமன்றத்தை அணுகுவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக பங்கேற்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.