புதுச்சேரியில் அமைச்சர் பதவியைப் பெற ரூ.100 கோடி அளவில் பேரம் பேசப்படுவதாக முன்னாள் முதல்வர் வி. நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவியேற்பு விழா தள்ளிப்போகும் நிலையில் இருப்பதற்கு காரணம் பணம் தொடர்பான பேரமே என கூறினார். முதலில் ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், அது “படியவில்லை” என்பதால் தற்போது ரூ.100 கோடி முதல் ரூ.150 கோடி வரை பேசப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தங்களின் கூட்டணி தோல்விக்கு தொகுதி பங்கீட்டின்போது ஏற்பட்ட குளறுபடிகளும் ஒற்றுமையின்மையும் காரணம் என அவர் கூறினார். மக்கள் ஆதரவு இருந்தபோதும் வாய்ப்பை தாங்களே நழுவவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் முதல்வர் என். ரங்கசாமி மவுனமாக இருக்காமல், அமைச்சர் பதவிக்கான பேரம் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என நாராயணசாமி வலியுறுத்தினார்.