தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததைக் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார். இது அரசியல் நோக்கத்துடன் அல்ல, தனிப்பட்ட நட்பின் அடிப்படையிலான சந்திப்பு என அவர் தெரிவித்தார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, தேர்தல் முடிவுகள் வெளியானதும் சமூக ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் சில குற்றச்சாட்டுகள் பரவுவதாக கூறினார். அவற்றுக்கு பதில் சொல்லாமல் விட்டால் அது உண்மையாகப் பார்க்கப்படும் சூழல் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்டாலின் தன் 40 ஆண்டுகால நண்பர் என்றும், தங்களின் நட்பு கொள்கை–அரசியலைத் தாண்டியதாகவும் ரஜினி கூறினார். ஜனநாயகத்தில் வெற்றி–தோல்வி இயல்பானதுதான் என்றாலும், ஸ்டாலின் தோற்றது சங்கடமாக இருந்ததால் நண்பர் என்ற முறையில் சென்று சந்தித்ததாக விளக்கினார்.
விஜய் முதல்வராக ஆகக் கூடாது என்பதற்காகவே ஸ்டாலினை சந்தித்தார் அல்லது இரண்டு பெரிய கட்சிகளை சேர்க்க முயன்றார் என்ற விமர்சனங்களை ரஜினி கடுமையாக மறுத்தார். “அந்த அளவுக்கு தரம் கெட்ட ஆள் நான் இல்லை” என்று தெளிவுபடுத்தினார்.
மேலும், விஜயின் வெற்றியை எம்ஜிஆர், என்டிஆர் சாதனைகளை விட பெரியதாகக் கூறிய ரஜினி, அதில் தனக்கு பொறாமை இல்லை என்றார். விஜய்க்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்ததாகவும், மக்கள் நலனுக்காக அவர் செயல்படுவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார். அதே நேரத்தில், விஜயின் ஆதரவாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்; அவர்களது தவறுகள் விஜயையே பாதிக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.





