நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 12 இடங்களையும், பா.ஜ.க. 4 இடங்களையும் வென்றுள்ளது. அ.தி.மு.க. மற்றும் ல.ஜ.க. தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளன.
முடிவுகள் வெளியானதையடுத்து, கடந்த முறையைப் போல இரண்டு அமைச்சர் பதவிகளும் சபாநாயகர் பதவியும் என மூன்று முக்கிய பதவிகளை வழங்க வேண்டும் என்று பா.ஜ.க. முதல்வர் என். ரங்கசாமியிடம் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதே நேரத்தில், ல.ஜ.க. தலைவர் சார்லஸ் மார்ட்டனும் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று கூட்டணி தலைவர்களிடம் வலியுறுத்தி வந்ததாக தகவல்.
ஆனால், அதிக இடங்களில் வெற்றி பெறும் கட்சிகளுக்கே பழைய முறையில் பதவிகள் வழங்கப்படும் என்று ரங்கசாமி முன்பே தெளிவுபடுத்தியிருந்தார். பா.ஜ.க. 10 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் மட்டுமே வென்ற நிலையில், மூன்று பதவிகளைத் தொடர்ந்தும் கோரியதால் முரண்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், முதல்வர் பதவியேற்பு நாளிலேயே தங்களும் அமைச்சர்களாக பதவியேற்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியதாகவும், இதனால் அழுத்தம் அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், மே 9 அன்று ரங்கசாமி இரண்டு அமைச்சர்களுக்கான பட்டியலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் சமர்ப்பித்தார்; அதில் நமச்சிவாயம், அன்பழகன் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இதைக் கண்ட பா.ஜ.க. தலைமை, அன்பழகனுக்கு வழங்கப்படும் அமைச்சர் பதவி எந்த ‘கோட்டா’வில் வருகிறது என்று கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு ரங்கசாமி அது பா.ஜ.க. ‘கோட்டா’வில்தான் என்று கூறியதாகவும் தகவல். பின்னர் பா.ஜ.க. தரப்பு சமாதானம் செய்து அன்பழகன் பெயருக்கு பதிலாக மல்லாடி கிருஷ்ணராவ் பெயரை சேர்க்க வைத்து நிலைமை தற்காலிகமாக தணிந்ததாக கூறப்படுகிறது.





