சென்னை: விவாகரத்து வழக்கு முடிவுக்கு வரும் வரை திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் ரவி மோகன் நேற்று தெரிவித்தார். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்ததாக கூறும் பல விஷயங்களையும் அவர் பேட்டியில் முன்வைத்தார்.

45 வயதான ரவி மோகன், ஜெயம், தனி ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். அவரது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் பாடகி கெனிஷா பிரான்சிஸுடன் அவர் நிகழ்ச்சிகளில் ஒன்றாக சென்றது கவனம் பெற்றது.

ஆர்த்தி குறித்து கெனிஷா பேசக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படும் நிலையில், கெனிஷா தனது நிலை குறித்து வீடியோ வெளியிட்டார். பின்னர் அவர் ரவி மோகனிடமிருந்து பிரிந்து விட்டதாகவும், சென்னையை விட்டு வெளியேறியதாகவும், ஆன்லைன் விமர்சனங்கள் மற்றும் “சைபர் புல்லிங்” காரணமாக சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாகவும் பதிவிட்டிருந்தார்.

பேட்டியில் ரவி மோகன், உண்மை வெல்ல வேண்டும் என்பதற்காக இதுவரை அமைதியாக இருந்ததாகவும், குழந்தைகள் காரணமாக பல விஷயங்களை பொறுத்துக் கொண்டதாகவும் கூறினார். கெனிஷாவை ஆன்லைன் தாக்குதல்கள் காரணமாக ஊரை விட்டே அனுப்பிவிட்டதாகவும், குடும்பத்தை குறை கூறினால் அமைதியாக இருக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

மேலும், தனது திருமணம் “பிளாக்மெயில்” மூலம் நடந்ததாகவும், வீட்டை விட்டு எதுவும் இல்லாமல் வெளியே வந்ததாகவும் அவர் கூறினார். “மூன்றெழுத்து நடிகை ஒருவர் என் குடும்பத்தை கெடுக்கிறார்” என குற்றம்சாட்டிய அவர், தனக்கு அல்லது கெனிஷாவுக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு “அவர்கள்” தான் காரணம் எனவும் கூறினார். தனிப்பட்ட பிரச்னைகள் தீர்ந்த பிறகே மீண்டும் நடிப்புக்கு வருவேன்; விவாகரத்து கிடைக்கும் வரை படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.