கோவை விமான நிலையத்தில் கடும் விமர்சனம்
முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) மீது கடுமையாக விமர்சனம் முன்வைத்தார். எம்ஜிஆர் தொடங்கி ஜெயலலிதா வழிநடத்திய இயக்கம், இன்றைக்கு அவரால் வலுவிழந்துள்ளதாக அவர் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் ஒருவனே போதும்” என்ற மனநிலையுடன் செயல்படுபவரை காலம் மாற்றிக் காட்டும் என தெரிவித்தார். இபிஎஸ் ஒரே நபர் மையமாக செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அமைச்சர்கள் எண்ணிக்கை, நிர்வாகம் குறித்து
அதிமுகவில் எத்தனை அமைச்சர்கள் என்ற கேள்விக்கு, அதை செய்தியாளர்களே சொல்லலாம் என்றும், தாம் இதுவரை எதையும் கூறவில்லை என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார். அரசு பொறுப்பேற்று இரண்டு நாட்களே ஆன நிலையில் இத்தனை கேள்விகள் எழுப்பப்படுவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
துறைகள் ஒதுக்கீடு இப்போதுதான் முடிந்துள்ளதாகவும், தாம் சென்னை செல்லும் நிலையிலிருப்பதால் அனைத்துக்கும் உடனடியாக பதில் அளிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
ஆரம்ப சாதனைகள் குறித்து கூறியது
200 யூனிட் இலவச மின்சார திட்டத்தை மக்கள் வரவேற்றுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார். மகளிர் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட விஷயங்களில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறினார். மேலும் பேருந்து நிலையங்கள் மற்றும் ஆலயங்கள் அருகே டாஸ்மாக் கடைகள் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் 717 கடைகள் அகற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பொறுப்பேற்ற உடனேயே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பது இந்தியாவில் முதல்வர் விஜயைத் தவிர வேறு யாராலும் இல்லை எனவும் அவர் கூறினார்.





