சென்னை: திமுக தேர்தல் தோல்வி முதல்வர் மு.க.ஸ்டாலினின் நிர்வாகத் தோல்வி அல்ல; அதிகாரிகளும் அவருக்கு நெருக்கமானவர்களும் செய்த தவறுகளின் விளைவாகவே அது ஏற்பட்டதாக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் தெரிவித்துள்ளார்.
தன் சமூக வலைதள பதிவில், தோல்விக்கான காரணங்களை ஆராய 38 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளதாகவும், கட்சித் தலைவராக முழுப் பொறுப்பையும் ஏற்கிறேன் என்று ஸ்டாலின் கூறியிருப்பது நல்ல தலைமைப் பண்பாகவும் அவர் குறிப்பிட்டார்.
தனக்கு ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு கோரி முதல்வரின் தனிப்பிரிவிற்கு தொடர்ந்து கடிதங்கள் அனுப்பியதாகவும், ஆனால் எந்த பதிலும் வரவில்லை; அந்த கடிதங்கள் முதல்வரின் பார்வைக்கு சென்றதா என்பதே தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
அரசு அலுவலகங்களில் ஆளுங்கட்சியினரின் செல்வாக்கு உண்மையை மாற்றி காட்டும் நிலையை உருவாக்கி, மக்களிடையே வெறுப்பை அதிகரிக்கும் என அவர் விமர்சித்தார். சென்னையில் ஒரு வக்கீலை விரட்டி தாக்கும் காட்சி ஊடகங்களில் வெளியாகி, மறுநாள் தாக்கப்பட்ட வக்கீல் மீதே வழக்கு பதிவு என்ற செய்தி வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய அநாகரீகங்களை ஒரு நல்ல முதல்வரின் கண்களுக்கு தெரியாமல் மறைத்து வைத்ததன் விலையே, திமுக சென்னையிலேயே கடுமையான பின்னடைவை சந்தித்ததாக அவர் கூறினார். முதல்வரிடம் பொய்களை சொல்லி நம்ப வைத்த அதிகாரிகளும் நெருக்கமானவர்களும் உண்மைகளை மறைத்ததே தோல்விக்குக் காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.





