அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்பான விவகாரத்தில் உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தமிழக சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அவ்வை சண்முகம் சாலை மற்றும் எஸ்.எஸ்.புரம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அந்தத் தொகுதியில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாகவும், பல பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் கூறினார்.
ஒரு மாதத்திற்குள் தற்காலிக சாலை அமைக்கப்படும் என்றும், விளையாட்டு மைதானங்களில் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் உள்விளையாட்டு அரங்கம் போன்ற வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும் என அவர் கூறினார். மேலும், பொதுநலச்சங்கங்களை இணைத்து மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.
அதிமுக எம்எல்ஏக்கள் விவகாரத்தில் இரு தரப்பினரும் மனு அளித்துள்ளதாகவும், அதில் உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.





