பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் தனியார் விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணங்களை கடுமையாக உயர்த்துவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. சில நேரங்களில் கட்டண உயர்வு 300 சதவீதம் வரை இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், இது சாமானிய பயணிகளுக்கு பெரிய சுமையாக மாறுவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

இந்த விவகாரம், அதிகப்படியான கட்டண உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை கோரி எஸ். லட்சுமிநாராயணன் தாக்கல் செய்த மனு விசாரணையில் முன்வந்தது. நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வு, ஒரே வழித்தடத்தில் இயங்கும் விமானங்களுக்கு இடையே ஏன் இவ்வளவு பெரிய கட்டண வித்தியாசம் உள்ளது என கேள்வி எழுப்பி, பொதுமக்களுக்கு ஏதாவது வகையில் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தியது.

மேலும், விமான கட்டணங்களை முறைப்படுத்துவது காலத்தின் கட்டாயம் என்றும் அமர்வு தெரிவித்தது. மத்திய அரசு மற்றும் டி.ஜி.சி.ஏ. சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “பாரதிய வாயுயான் ஆதினியம் - 2024” சட்டம் அமலுக்கு வந்துள்ளதாகவும், அனைத்து தரப்பு ஆலோசனைகளுக்குப் பிறகு புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு நிரந்தரத் தீர்வு எட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பு, பழைய சட்டங்களிலேயே அதிகப்படியான கட்டணங்களை கட்டுப்படுத்த டி.ஜி.சி.ஏ.-க்கு அதிகாரம் இருப்பதாகவும், அதை பயன்படுத்தாமல் அதிகாரிகள் மவுனம் காக்கின்றனர் என்றும் வாதிட்டது. டி.ஜி.சி.ஏ. தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்திற்கு பதிலளிக்க மனுதாரருக்கு அவகாசம் வழங்கி, வழக்கை ஜூலை 13-க்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.