சென்னை: பள்ளி, கல்லூரி, விடுதி, பஸ் முனையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அருகே போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத மது விற்பனை, விநியோகத்தை தடுக்க தீவிர ஆய்வு மேற்கொள்ளுமாறு தமிழக மது விலக்கு ஆயத்தீர்வை துறை உதவி ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவது அரசின் பொறுப்பு என்றும், குழந்தைகள், இளைஞர்கள், பெண்களின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதே முக்கிய நோக்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளை கண்டறிந்து குறிவைத்து சோதனை நடத்தவும், கள்ளச்சாராய உற்பத்தி/விற்பனை நடைபெறும் இடங்களை அடையாளம் காணவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தன்னார்வ அமைப்புகள், தன்னார்வலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், குடியிருப்போர் நலச்சங்கங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் ஆகியோருடன் இணைந்து ரகசிய தகவல் சேகரிக்கும் குழுக்களை அமைக்கவும் கூறப்பட்டுள்ளது.
இச்செயல்களில் ஈடுபடுவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், போலீசார், போதைப்பொருள் தடுப்பு பிரிவு, டாஸ்மாக், வனத்துறை, ரயில்வே போலீசார் மற்றும் அண்டை மாநில அதிகாரிகளுடன் பயனுள்ள ஒருங்கிணைப்பை மேற்கொள்ளவும் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள், கிளப்புகள், நட்சத்திர ஹோட்டல் மதுக்கூடங்களில் வேலைநேர கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறதா என்பதையும், மது வகைகள் அதிக விலைக்கு விற்கப்படாததையும் உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 21 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கு மது விற்பனை தடுக்கவும், சட்டவிரோத மதுக்கூடங்களை கண்டறிந்து மூடவும், சிறு கடைகளில் மது விற்பனை நடைபெறாமல் தடுப்பதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.





