வாஷிங்டன்: ஈரான் மீது மீண்டும் ராணுவ நடவடிக்கை தொடங்க அமெரிக்கா பரிசீலித்து வருவதாக வரும் தகவல்களுக்கு இடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட மர்மமான பதிவு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் அணுசக்தி திட்டத்தை மையமாகக் கொண்டு அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக போர் நடத்தி வரும் சூழலில், அமைதி பேச்சுவார்த்தைக்காக தற்காலிக போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இரு தரப்பும் மாறிமாறி நிபந்தனைகள் விதித்து, அவற்றை ஏற்க மறுப்பதால் பேச்சுவார்த்தைகள் இழுபறியாக நீடிக்கின்றன.
இந்த ராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்தால், ஈரானுக்கு எதிராக மீண்டும் ராணுவ நடவடிக்கைக்கு திரும்ப அமெரிக்கா பரிசீலிக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் டிரம்ப் பகிர்ந்த பதிவு பேசுபொருளாகியுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் அந்த படத்தில், கொந்தளிக்கும் கடலில் பயணிக்கும் போர்க் கப்பல்களின் முன் நின்று டிரம்ப் கேமராவை நோக்கி சுட்டிக்காட்டுவது போல காட்சி உள்ளது. சில கப்பல்களில் ஈரானியக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருப்பதாகவும், ‘புயலுக்கு முன் அமைதி’ என்ற வாசகம் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் டிரம்ப் அருகில் அமெரிக்க கடற்படை அதிகாரி ஒருவர் நிற்பது போலவும் அந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் ஈரான் பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகர், எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் தக்க பதிலடி கொடுக்க ஈரான் ராணுவம் தயாராக இருப்பதாக கூறினார். தவறான உத்திகளும் தவறான முடிவுகளும் தவறான விளைவுகளையே உருவாக்கும் என்றும், இதை உலகம் ஏற்கனவே உணர்ந்துவிட்டதாகவும் அவர் எச்சரித்தார்.





