பீஜிங்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் சீனா சென்று திரும்பினார். மூன்று நாள் பயணத்தில் அவருடன் அமெரிக்க அரசு அதிகாரிகளும் சென்றனர்.
அந்த பயணத்தின் போது சீன அதிகாரிகள் பல்வேறு நினைவுப் பரிசுகளை வழங்கியதாகவும், அதில் மின்னணு பொருட்களும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், சீன அதிகாரிகள் வழங்கிய பரிசுப் பொருட்களை அதிபரின் சிறப்பு விமானத்துக்குள் எடுத்துச் செல்லக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல். இதனால், விமானம் அருகே இருந்த குப்பைத் தொட்டியில் அந்த பொருட்களை அமெரிக்க அதிகாரிகள் வீசி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இது புதிதான நடைமுறை அல்ல; தலைமுறை தலைமுறையாக சீனாவுக்கு வரும் அமெரிக்க குழுக்கள் பின்பற்றும் வழக்கம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். சீனா ரகசிய கண்காணிப்பு முறைகளுக்குப் பெயர் பெற்றதால், உளவு வாய்ப்பைத் தவிர்க்கவே இவ்வாறு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





