சென்னை: தமிழக முதல்வர் விஜயின் தனிப்பட்ட அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டு, கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து பதவி நீக்கப்பட்ட ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட், இந்த விவகாரத்தால் கடும் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதாவது: முன்னாள் தி.மு.க. எம்.பி. ஒருவர், ஒரு பிரபல பா.ஜ.க. எம்.பி.க்கு இந்த ஜோதிடரை அறிமுகம் செய்து வைத்ததாகவும், அந்த எம்.பி. அத்வானிக்கு நெருக்கமானவர் என்பதால் ரிக்கி ரத்தனை அத்வானியிடம் அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அப்போது அத்வானியின் ஜாதகம் பார்த்த அவர், “அடுத்த பிரதமர் நீங்கள் தான்” என்று உறுதியாக கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

இது மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் நடந்ததாக குறிப்பிடப்படுகிறது. 2008-ல் அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்றபோது, “மன்மோகன் அரசு கவிழும்; பின்னர் நீங்கள் பிரதமர் ஆவீர்கள்” என்று அத்வானியிடம் கூறியதாகவும் தகவல்.

ஆனால் 2008 ஜூலை 22-ல் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி ஆதரவு அளித்ததால் மன்மோகன் அரசு வெற்றி பெற்றது. பின்னர் 2009 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று அத்வானி பிரதமர் ஆவார் எனவும் ரிக்கி ரத்தன் கூறியதாகச் சொல்லப்பட்டாலும், அது நிகழவில்லை.

இந்நிலையில், விஜயின் சிறப்பு செயலராக நியமிக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டதால் ரிக்கி ரத்தன் மனமுடைந்துள்ளதாகவும், த.வெ.க.வில் உள்ள சிலர் தன்னை விரும்பாமல் ஊடகங்களுக்கு தன்னைப் பற்றிய தகவல்களை வெளியிட்டதாக அவர் நொந்ததாகவும் கூறப்படுகிறது.