புதுடில்லி: உள்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில், பெட்ரோல் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு ரூ.3 ‘விண்ட்பால்’ வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதே நேரத்தில், டீசல் ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு ரூ.16.50 ஆகவும், விமான எரிபொருள் (ATF) ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு ரூ.16 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

நிதி அமைச்சக அறிவிப்பில், பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கான சாலை மற்றும் உள்கட்டமைப்பு கூடுதல் வரி முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. உள்நாட்டு பயன்பாட்டிற்காக விற்கப்படும் பெட்ரோல், டீசல் மீதான தற்போதைய வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

முதல்முறையாக பெட்ரோல் ஏற்றுமதியின் மீது லிட்டருக்கு ரூ.3 சிறப்பு கூடுதல் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை பெட்ரோல் ஏற்றுமதிக்கு கூடுதல் வரி இல்லை; டீசல் ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூ.23 இலிருந்து ரூ.16.50 ஆகவும், விமான எரிபொருள் வரி ரூ.33 இலிருந்து ரூ.16 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

போர், சர்வதேச தட்டுப்பாடு, இயற்கை பேரிடர் போன்ற வெளிப்புற காரணங்களால் நிறுவனங்கள் எதிர்பாராத அளவில் அதிக லாபம் ஈட்டும் போது, அந்த அசாதாரண லாபத்தின் மீது அரசு விதிக்கும் சிறப்பு வரியே ‘விண்ட்பால்’ வரி எனப்படுகிறது. தற்போதைய சூழலில் போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.