டாக்காவில், கங்கை நதி நீர் பகிர்வுக்கான புதிய ஒப்பந்தமே இந்தியாவுடனான எதிர்கால உறவை தீர்மானிக்கும் என வங்கதேசம் தெரிவித்துள்ளது. 30 ஆண்டுகளுக்கான தற்போதைய ஒப்பந்தம் இந்த ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில் இந்த நிலைப்பாடு வெளிப்பட்டுள்ளது.
1996-ஆம் ஆண்டு அப்போது இந்திய பிரதமராக இருந்த தேவகவுடா மற்றும் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா முன்னிலையில் கையெழுத்தானதே தற்போதைய ஒப்பந்தம். இது முடிவடைய உள்ளதால், நீண்டகால அடிப்படையிலான புதிய ஒப்பந்தத்தை உருவாக்க வங்கதேசம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வங்கதேச அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு, இந்தியாவுடன் அணுகுமுறையில் அந்நாடு புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வங்கதேச தேசியவாத கட்சி (பி.என்.பி.) பொதுச் செயலரும், உள்ளாட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான மிர்சா பக்ரூல் இஸ்லாம் ஆலம்கீர், வங்கதேச மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பேச்சுவார்த்தைகள் மூலம் புதிய கங்கை ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற தெளிவான செய்தியை இந்திய அரசுக்கு தெரிவிக்க விரும்புகிறோம் என்றார்.
மேலும், 30 ஆண்டுகால ஒப்பந்தத்தை புதுப்பிப்பதில் நிலவும் நிச்சயமற்ற தன்மை எதிர்கால நதிநீர் பகிர்வு குறித்து கவலைகளை உருவாக்கியுள்ளதாகவும், புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை தற்போதைய ஒப்பந்தமே தொடர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அண்டை நாடுகளுக்கிடையேயான எதிர்கால நதிநீர் பகிர்வு ஒப்பந்தங்கள் குறிப்பிட்ட கால வரம்புக்குள் மட்டும் கட்டுப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். வங்கதேசத்தின் 17 கோடி மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் வாழ்வாதாரம், பல்லுயிர் பெருக்கம் மற்றும் பல கிளை நதிகளுக்கான நீர் வினியோகத்திற்காக இந்த நீரையே நம்பியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.





