சென்னை: கேரளாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்த தமிழக முதல்வர் விஜய், அந்தப் பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள புதிய முதல்வர் சதீசன் பதவி ஏற்பு விழா இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ள இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் தேசிய தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் கலந்துகொள்ள முதல்வர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்காக இன்று காலை தனி விமானத்தில் திருவனந்தபுரம் செல்ல அவர் திட்டமிட்டிருந்த நிலையில், அந்தப் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பதவியேற்ற பின் முதலில் டில்லி சென்று ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திப்பது மரபாக இருப்பதால், கேரள பயணம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அடுத்த வாரம் டில்லி செல்ல விஜய் தயாராகி வருகிறார்.
அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல். பிரதமர் வெளிநாட்டு பயணத்திலிருந்து திரும்பிய பின் சந்திப்பு நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.





