சென்னை: கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழக காவல் துறையின் ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் டி.ஐ.ஜி. விஜயலட்சுமி, காவல் துறை நிர்வாக பணியாளர் ஒருவரை செருப்பால் அடித்ததாக வெளியான புகாரை மறுத்துள்ளார்.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, நிர்வாக பணியாளர்கள் சங்கம் விஜயலட்சுமி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி, டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோட்டிடம் புகார் மனு அளித்துள்ளது. டி.ஜி.பி. நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த உறுதிமொழியைத் தொடர்ந்து, விஜயலட்சுமிக்கு எதிராக போராட்டம் நடத்தும் முடிவை சங்கம் தற்காலிகமாக தள்ளிவைத்துள்ளது.

தன் விளக்கத்தில், காவல் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருவதாகவும், இதுவரை தன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லையெனவும் விஜயலட்சுமி கூறினார். பணியிட மாற்றம் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை உரிய முறையில் பரிசீலித்து உத்தரவுகள் வழங்கியதாகவும் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நிர்வாக பணியாளரின் செயல்பாடுகள் சந்தேகப்படும்படி இருந்ததால் அவரை திட்டியதாகவும், ஆனால் தாக்கியதாகவும் செருப்பால் அடித்ததாகவும் அவதூறு பரப்பப்படுவதாகவும் கூறினார். நடந்தது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தன் விளக்கத்தை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.