பாலக்காடு: குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவில் கிழக்கு நுழைவாயிலில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘குருவாயூர் கேசவன்’ யானை சிலையின் தந்தங்கள், 50 ஆண்டுகளுக்குப் பின் வெற்றிகரமாக மீண்டும் பொருத்தப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளன.
1970ல் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு கோவில் வளாகத்தில் பல்வேறு மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, கோவிலின் ஆன்மிக வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற ‘குருவாயூர் கேசவன்’ நினைவாக கிழக்கு நுழைவாயிலில் உருவச்சிலை நிறுவப்பட்டது.
‘கஜராஜன்’ என அழைக்கப்பட்ட இந்த யானை 10 அடி 9 அங்குல உயரமுடையது. 54 ஆண்டுகள் கோவில் சேவையில் ஈடுபட்ட அது, 1976ல் ஏகாதசி தினத்தில் 64 வயதில் உயிரிழந்தது. அதன் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில், அது உயிருடன் இருந்த காலத்திலேயே சிலை நிறுவப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சிலையின் தந்தங்களை அப்போது பிரபல மரச்சிற்பக் கலைஞரான மறைந்த இளவள்ளி நாராயணன் ஆசாரி மிக நுணுக்கமாக செதுக்கி பொருத்தினார். காலப்போக்கில் தளர்வடைந்த தந்தங்களை சீரமைக்கும் பொறுப்பு, அவரது மகனும் பிரபல சிற்பியுமான இளவள்ளி நந்தனிடம் ஒப்படைக்கப்பட்டது.
இப்போது தந்தங்கள் அசல் கம்பீரத்துடன் மீட்டெடுக்கப்பட்டுள்ளதால், குருவாயூர் வரலாற்றின் முக்கிய அடையாளங்களில் ஒன்று மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.





