தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று 11 மாவட்டங்களிலும், நாளை 6 மாவட்டங்களிலும் கனமழை தீவிரமாக இருக்கும் என முன்னறிவிப்பு கூறுகிறது.

வானிலை அறிக்கையின் படி, தெற்கு கடலோர ஆந்திராவின் மேல் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் கேரளா–தெற்கு உள் கர்நாடகம்–ராயலசீமா வழியாக நீளும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் தாக்கம் அடுத்த இரண்டு நாட்களும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, கரூர், மதுரை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.