பூரண மதுவிலக்கு வரைவு இறுதிக்கட்டத்தில்

மக்களின் நீண்டகால கோரிக்கையை கருத்தில் கொண்டு, ஜம்மு-காஷ்மீரில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. யூனியன் பிரதேசத்தில் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

பல்வேறு சமூக, மத மற்றும் அரசியல் தரப்பினரிடமிருந்து மது விற்பனைக்கு முழுத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்ட நிலையில், இதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சட்ட வரைவு தயாரிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் தன்வீர் சாதிக், கலால் வருவாயை விட பொது சுகாதாரம் மற்றும் சமூக நலனுக்கே அரசு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்தார்.

மேலும், மது விற்பனைக்கு விரைவில் முழுத் தடை விதிக்கும் வகையில் சட்ட வரைவு இறுதிசெய்யப்பட்டு வருவதாகவும், அது முடிந்ததும் மதுவிலக்கு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.