சென்னை: நெதர்லாந்தில் இருந்து 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்த மீட்பு தொடர்பான நிகழ்வில் நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டனுடன் இணைந்து பங்கேற்றதாக அவர் தனது அறிக்கையில் கூறினார். இந்த செப்பேடுகள் 21 பெரிய தகடுகள் மற்றும் மூன்று சிறிய தகடுகள் கொண்ட தொகுப்பாக உள்ளன.
இதில் பெரும்பாலான எழுத்துகள் தமிழில் பொறிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழை உலகின் அழகான மொழிகளில் ஒன்றாகவும் அவர் குறிப்பிட்டார். முதலாம் ராஜராஜ சோழன் வாய்மொழியாக அளித்த வாக்குறுதியை, அவரது மகன் முதலாம் ராஜேந்திர சோழன் முறைப்படுத்தியதை இவை பதிவு செய்கின்றன என்றும் கூறினார்.
சோழர்களின் கலாசாரம் மற்றும் கடற்படை திறமை குறித்து இந்தியர்கள் பெருமை கொள்கிறோம் என தெரிவித்த பிரதமர், செப்பேடுகளை 19ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்திலிருந்து பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலை உள்ளிட்ட நெதர்லாந்து அரசுக்கு நன்றியும் தெரிவித்தார்.





