அரசுமுறைப் பயணமாக நார்வே தலைநகர் ஓஸ்லோ சென்ற பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 40 ஆண்டுகளில் அந்த நாட்டுக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் பயணங்களைத் தொடர்ந்து அவர் நார்வே சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், விமான நிலையத்தில் வரவேற்ற நார்வே பிரதமர் ஜோனாஸ் கர்ர் ஸ்டோருக்கு அவர் நன்றி தெரிவித்தார். இந்தப் பயணம் இந்தியா–நார்வே நட்புறவை மேலும் வலுப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பயணத்தின் போது நார்வே மன்னர் ஐந்தாம் ஹெரால்டும் ராணி சோன்ஜாவையும் சந்திக்க உள்ளார். மேலும், இருநாடுகளுக்கிடையிலான உறவுகள் குறித்து பிரதமர் ஸ்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ஓஸ்லோவில் நடைபெறும் இந்தியா–நார்வே உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதில் டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளின் பிரதமர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.