நடிகர் ரஜினிகாந்த், நடிகர்-அரசியல்வாதி விஜய் முதல்வராகியதைக் குறித்து தமக்கு பொறாமை இல்லை என்று கூறினார். விஜயின் வெற்றியை “ஆச்சரியம் கலந்த சந்தோஷம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானபோது தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்ததற்காக எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த ரஜினி, ஸ்டாலின் தன் 38 ஆண்டு கால நண்பர் என்றும், அந்த நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும் தெரிவித்தார். சென்னை கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றது தனக்கு வருத்தமாக இருந்ததால் நண்பர் என்ற முறையில் நேரில் சென்று பார்த்ததாகவும் கூறினார்.

அந்த சந்திப்பை வைத்து விஜயைத் தடுக்க முயன்றதாகவும், பெரிய கட்சிகளை இணைக்கச் சென்றதாகவும் கூறப்பட்ட விமர்சனங்களை அவர் மறுத்தார். மேலும், விஜய்க்கு வாழ்த்து சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டுக்கும் பதிலளித்து, விஜய் வெற்றி பெற்றவுடன் ‘எக்ஸ்’ தளத்தில் வாழ்த்து பதிவிட்டதாக தெரிவித்தார்.

பெங்களூரு செல்லும் போது ஒருவர் மொபைலில் “விஜய் முதல்வராகி விட்டார்” என்று சொன்னபோது தாம் சிரித்துக்கொண்டே சென்றதாகவும், அதையே வைத்து பொறாமை என பேசப்பட்டதாகவும் ரஜினி கூறினார். அரசியலில் இருந்து விலகிய நிலையில் தமக்கு ஏன் பொறாமை இருக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

விஜயின் சாதனையை பாராட்டிய ரஜினி, தமக்கும் விஜய்க்கும் தலைமுறை இடைவெளி இருப்பதால் ஒப்பீடுகள் தேவையில்லை என்றார். மத்தியில் பா.ஜ.க. மற்றும் மாநிலத்தில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளை எதிர்த்து தனியாக வென்றது பெரிய சாதனை என்றும், சினிமா துறையிலிருந்து வந்து அதை செய்து காட்டியதாகவும் குறிப்பிட்டார்.

இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு பெரிய எதிர்பார்ப்பு இருப்பதாக கூறிய ரஜினி, அதை அவர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். புதிய அரசுக்கு மக்கள் இரண்டு ஆண்டுகள் அவகாசம் தர வேண்டும் என்றும், விஜயின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்; அவர்கள் செய்யும் தவறு நேரடியாக முதல்வரையே பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.