காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வி.டி.சதீஷன் இன்று கேரள முதல்வராக பதவியேற்க உள்ளார். திருவனந்தபுரம் மத்திய மைதானத்தில் காலை 10:00 மணிக்கு நடைபெறும் விழாவில், கேரள ஆளுநர் அர்லேக்கர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

கடந்த மாதம் 9ஆம் தேதி நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், மொத்த 140 தொகுதிகளில் 102 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யு.டி.எப்) ஆட்சியைப் பிடித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எப்) தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது.

முதல்வர் தேர்வில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வேணுகோபால், சதீஷன், ரமேஷ் சென்னிதலா ஆகியோருக்கிடையே போட்டி நிலவியதால் முடிவு தாமதமானது. பின்னர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பார்லிமென்ட் குழுத் தலைவர் சோனியா காந்தி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கூட்டணி தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தி சதீஷன் பெயரை இறுதி செய்தனர்.

நேற்று ஆளுநரை சந்தித்த சதீஷன், முழு அமைச்சரவை பட்டியலை வழங்கினார். முதல்வருடன் சேர்த்து 20 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்றும், இதில் காங்கிரஸில் இருந்து 12 பேர் மற்றும் கூட்டணி கட்சிகளில் இருந்து 8 பேர் இருப்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் ரமேஷ் சென்னிதலா, கே.முரளீதரன், சன்னி ஜோசப் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

செய்தியாளர்களிடம் பேசிய சதீஷன், சமூக மற்றும் பிராந்திய சமநிலையை கருத்தில் கொண்டு கூட்டணி தலைவர்களுடன் ஆலோசித்து அமைச்சரவை பட்டியல் இறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தார். மேலும், மூத்த சட்டமன்ற உறுப்பினர் திருவனச்சூர் ராதாகிருஷ்ணன் சபாநாயகராகவும், ஷானிமோல் உஸ்மான் துணை சபாநாயகராகவும் நியமிக்க கூட்டணி முடிவு செய்துள்ளதாக கூறினார்.