புதுடில்லி: தலைமை நீதிபதியையும் சேர்த்து உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கையை 34ல் இருந்து 38 ஆக உயர்த்தும் முன்மொழிவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
தேங்கி கிடக்கும் வழக்குகளை சிறப்பாக கையாளவும், விசாரணை மற்றும் தீர்ப்பளிப்பு நடைமுறைகளில் ஏற்படும் காலதாமதங்களை குறைக்கவும் இந்த உயர்வு உதவும் என மத்திய அரசு தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை, மே 5 அன்று பார்லிமென்டில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த உயர்வுக்கு ஒப்புதல் அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதனை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை திருத்தும் அவசரச் சட்டம் முன்மொழியப்பட்ட நிலையில், அதற்கு தற்போது ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, 2019ல் திருத்தச் சட்டத்தின் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 31ல் இருந்து 34 ஆக உயர்த்தப்பட்டிருந்தது.





