மதுரை மத்தி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் தியாகராஜன், தனது தோல்வியை ஏற்றுக்கொண்டு, கொள்கையில் உறுதியாக இருந்ததற்காக பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட நான்கு பக்க அறிக்கையில், சுமார் பத்தாண்டுகளுக்கு முன் சமூக மேம்பாடு மற்றும் மக்களின் வாழ்க்கைத்தர உயர்வை நோக்கமாகக் கொண்டு வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு தேர்தல் அரசியலுக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டார். சமூக நீதி இயக்கங்களின் பங்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தந்தை–மூதாதையர்களின் பணியைத் தொடருதல், குடும்பத்தின் நன்மதிப்பை உயர்த்துதல் ஆகியவை தன் நோக்கங்கள் எனவும் தெரிவித்தார்.

கட்சியிலும், தொகுதியிலும், மாநில அளவிலும் அமைச்சராக பல மாற்றங்களை ஏற்படுத்தியதில் திருப்தி இருப்பதாக கூறிய அவர், சில திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என ஒப்புக்கொண்டார். நிதித்துறை சீர்திருத்தங்கள், மதுரை மெட்ரோ, மதுரை மத்திய சிறையை வெளியே மாற்றுதல், மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்கள் ஆகியவை இன்னும் முழுமையடையவில்லை என பட்டியலிட்டார்.

2026-ல் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் முடிவை தள்ளிவைத்து மீண்டும் சீட் கேட்டதாகவும், வெற்றி பெற்று அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிலுவை திட்டங்களை முடிக்கலாம் என்ற நம்பிக்கை நிறைவேறவில்லை என்றும் அவர் கூறினார். தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சித் தரப்பில் வேட்பு மனு/பிரமாண பத்திர குறைபாடுகள் குறித்து தகவல்கள் வந்ததாகவும், அவற்றை அடிப்படையாக வைத்து தகுதி நீக்கம் கோரும் ‘குறுக்கு வழி’ செல்ல விரும்பவில்லை என்றும், அதற்காக வருத்தமில்லை என்றும் தெரிவித்தார்.

ஓட்டுக்கு பணம் தராமலும் தவறான பிரசாரம் செய்யாமலும் தோற்றது மகிழ்ச்சியே என கூறிய அவர், தன்னை ஆதரித்த 44,286 வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். வெற்றியை விட கொள்கைகளே முக்கியம் என்ற நம்பிக்கையையும் கூறிய அவர், சில வாரங்கள் பொது வாழ்க்கையிலிருந்து விலக இருப்பதாகவும், புதிய அரசு அனைத்து அரசு செயல்பாடுகளிலும் சீர்திருத்தங்களை தொடங்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார். எம்எல்ஏ, அமைச்சர் மற்றும் ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினராக செய்த பணிகளையும் அவர் அறிக்கையில் பட்டியலிட்டுள்ளார்.