வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன், த.வெ.க. அரசின் அமைச்சரவையில் கட்சி பங்கேற்க வேண்டுமா என்பதில் வி.சி.க.வில் கருத்து வேறுபாடு நீடிப்பதாக தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், அமைச்சரவையில் இடம் பெற வேண்டாம் என்பது தனது நிலைப்பாடு; ஆனால் கட்சியில் பெரும்பாலானோர் பங்கேற்க வேண்டும் என நினைப்பதாக கூறினார்.
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தால் இன்றைய அரசியலில் பல திருப்பங்கள் ஏற்பட்டிருக்கும் என சிலர் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தலுக்கு முன்பே திராவிடக் கட்சிகள் பலவீனப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டை வி.சி.க. எடுத்ததாக அவர் நினைவூட்டினார். விமர்சனங்கள் வந்தாலும் அ.தி.மு.க. பாதுகாப்போடும் தி.மு.க. வலிமையோடும் இருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியதாகவும், கடந்த லோக்சபா தேர்தலில் 11% ஓட்டு பெற்ற பா.ஜ.க.வின் ஓட்டு வங்கி 2.5% ஆக குறைந்ததாகவும் அவர் கூறினார்.
திராவிடக் கட்சிகளை பலவீனப்படுத்தினால் யார் அந்த இடத்தை நிரப்பப் போகிறார்கள் என்பதே முக்கியக் கேள்வி என அவர் சுட்டிக்காட்டினார். காலப்போக்கில் அரசியல் த.வெ.க. - பா.ஜ.க. என்ற நிலைக்கு வந்து நிற்கும் சூழல் உருவாகலாம் என்றும், அதைத் தடுக்க திராவிடக் கட்சிகள் விழிப்புடனும் வலிமையுடனும் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
அமைச்சரவையில் சேர்வது குறித்து தான்தோன்றித்தனமாக முடிவெடுக்காமல், கட்சிக்குள் நடைபெறும் விவாதத்தின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியபோதும், “இந்த வினாடி வரை” இறுதி முடிவு எடுக்கவில்லை; அதற்கான கால அவகாசம் தேவை எனவும் அவர் கூறினார்.





