சென்னை: நாட்டின் இழந்த பாரம்பரியச் செல்வங்களை மீட்டெடுப்பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை தமிழக கவர்னர் அர்லேக்கர் பாராட்டியுள்ளார்.
அறிக்கையில், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு மீண்டும் வந்துள்ள சோழப் பேரரசின் முக்கிய பாரம்பரியச் சின்னமாகக் கருதப்படும் ஆனைமங்கலம் செப்பேடுகள் மீட்பு மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார். அவை வெறும் தொல்பொருட்கள் அல்ல; தமிழர்களின் செழுமையான பண்பாட்டு மரபு, சிறந்த நிர்வாகத் திறன், அறிவியல் முன்னேற்றம் மற்றும் மத நல்லிணக்க உணர்வை வெளிப்படுத்தும் உயிரோட்டமான சான்றுகள் என்றும் கூறினார்.
மேலும், நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரை அமைப்பதற்காக மாமன்னர் ராஜராஜ சோழன் வழங்கிய காணிக்கை குறித்த பதிவு, இந்தியாவின் நீண்டகால மரபை பிரதிபலிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த அரும்பொருட்களை மீட்டெடுக்கச் செயல்பட்ட அனைவருக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். இது தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதற்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வு என்றும், இளைய தலைமுறையினர் இந்தியாவின் நாகரிகப் பாரம்பரியத்தை மதித்து பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





