தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) பொதுத்தேர்வு முடிவுகள் மே 20ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னையில் அறிவித்தார்.
மாநிலம் முழுவதும் மார்ச் 11ம் தேதி தொடங்கிய தேர்வுகளை சுமார் 9 லட்சம் மாணவர்கள், மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தப் பணிகள் முடிந்த நிலையில், முடிவுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் மேற்கொண்டு வருகிறது.
முடிவுகள் வெளியீடு தொடர்பாக முதல்வர் விஜய்யுடன் ஆலோசனை நடத்திய பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மாணவர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி விவரங்களை பயன்படுத்தி www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய அரசு அதிகாரப்பூர்வ இணையதளங்களில் முடிவுகளைப் பார்க்கலாம். மேலும் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண் 78452 52525 மூலமாகவும் முடிவுகளை அறியலாம்; பள்ளிகளில் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்களுக்கு எஸ்.எம்.எஸ் வழியாகவும் முடிவுகள் அனுப்பப்படும்.
இதனிடையே, கோடை விடுமுறைக்குப் பிறகு பெரும்பாலான வகுப்புகளுக்கு ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 4ம் தேதி மீண்டும் வகுப்புகள் தொடங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். புதிய பாடத்திட்ட அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 1 முதல் 3ம் வகுப்பு பாடப்புத்தகங்களையும் அவர் வெளியிட்டார்.





