சமீபத்திய சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு தி.மு.க.வை மீண்டும் உறுதிப்படுத்த, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முழுதும் நடைபயணம் மேற்கொள்ள கட்சி வட்டாரத்தில் திட்டமிடப்படுவதாக கூறப்படுகிறது.
மூத்த நிர்வாகிகள் கூறுகையில், 20க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் தி.மு.க. தோல்வியடைந்ததாகவும், கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் தோற்றதாகவும் தெரிவித்தனர். தோல்விக்கான காரணங்களை ஆராய ஸ்டாலின் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் கூறினர்.
2011ல் ஆட்சியை இழந்து, எதிர்க்கட்சித் தகுதியையும் பெற முடியாத பின்னடைவுக்குப் பிறகு, 2016 தேர்தலை முன்னிட்டு ஸ்டாலின் 2015 செப்டம்பரில் சுற்றுப்பயணத்தை தொடங்கியதை அவர்கள் நினைவூட்டினர். அந்த தேர்தலில் வெற்றி கிடைக்காவிட்டாலும், கட்சி மீண்டதுடன், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு இணையாக ஸ்டாலின் வளர்ந்ததாகவும் தெரிவித்தனர்.
அதே பாணியில் உதயநிதியையும் வளர்க்கும் நோக்கில், ஆந்திர அரசியல் பாணியில் நடைபயணம் திட்டமிடப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நடைபயணத்தில் மக்களை சந்திப்பதுடன், கட்சியினரை உற்சாகப்படுத்தி, கட்சி கட்டமைப்பை சீரமைக்கும் நடவடிக்கைகளும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயில் தணிந்த பின் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.





