ஆப்ரிக்க நாடுகளான காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா தொற்று வேகமாக பரவி வருவதால் சுகாதாரத் துறையினர் கவலை அடைந்துள்ளனர். இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், 88 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியாசிஸ் இந்த பரவலை “சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசர நிலை” என அறிவித்துள்ளார்.
எபோலா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு உடல் திரவங்கள் மூலம் விரைவாக பரவக்கூடும் என சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். வாந்தி, ரத்தம் அல்லது விந்து போன்ற திரவங்கள் வழியாக தொற்று ஏற்படலாம். இது பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய நோயாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது; மேலும் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் அல்லது தடுப்பூசிகள் இல்லை என தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று ஆபத்தானதும் பரவக்கூடியதுமாக இருந்தாலும், இது கொரோனா போன்ற உலகளாவிய பெருந்தொற்றாக இல்லை என அண்டை நாடுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் சர்வதேச எல்லைகளை மூடவோ, வர்த்தகத் தடைகள் விதிக்கவோ தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





