சென்னை: தமிழகமெங்கும் செயல்படும் அம்மா உணவகங்களை சீரமைத்து, உள்கட்டமைப்பை மேம்படுத்த முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சமீப காலமாக உணவின் தரமும் சுவையும் குறைந்துள்ளதாக வந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது சென்னை மாநகராட்சி சார்பில் 383 அம்மா உணவகங்களும், பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் சார்பில் 237 அம்மா உணவகங்களும் இயங்கி வருகின்றன.
இவற்றில் வழங்கப்படும் உணவு வகைகள் திருப்திகரமாக இல்லை என்ற தகவல் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை செயலர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர், அம்மா உணவகங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், சமையல் உபகரணங்களை உடனடியாக கொள்முதல் செய்யவும் உத்தரவிட்டார்.
மேலும், சுவையுடன் கூடிய தரமான உணவை பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என்றும், சீரமைப்பு மற்றும் பொருட்கள் கொள்முதல் செலவுகளை மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் பொது நிதியில் இருந்து மேற்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.





