வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் தொடர்வதாக ஒரு சிறுபான்மையினர் உரிமை அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 30 வரை உள்ள காலகட்டத்தை உள்ளடக்கிய அறிக்கையில், வன்முறை, தீவைப்பு மற்றும் கோவில்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக 111 வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘சனாதனி பவுண்டேஷன்’ வெளியிட்டுள்ள அந்த அறிக்கையின் படி, ஹிந்துக்கள் உட்பட சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த 24 பேர் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட கொடூர சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர்.
மேலும், சிறுபான்மையினரின் பூர்வீக நிலங்கள், வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பலவந்தமாக பறிக்கப்பட்டதாக 16 புகார்கள் பதிவானதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
2024 போராட்டங்களுக்குப் பிறகு வங்கதேசத்தில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில், பார்லிமென்ட் தேர்தலுக்குப் பின்னர் பிப்ரவரியில் வங்கதேச தேசியவாதக் கட்சியின் தாரிக் ரஹ்மான் 11-வது பிரதமராக பதவியேற்றார்.
வங்கதேசத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து இந்தியா தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளதாகவும் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.





