மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்ட நடவடிக்கையாக, பொதுமக்கள் 16 மொழிகளில் ஆன்லைன் வழியாக சுயவிபரங்களை பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் சுந்தரேஷ்பாபு தெரிவித்தார்.
ஜூலை 17 முதல் 31 வரை இந்த ஆன்லைன் பதிவு நடைமுறை செயல்படும் என்றும், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட தங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்வு செய்து விவரங்களை சமர்ப்பிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, வீடுகள் கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1 முதல் 31 வரை நடைபெறும். இந்த கட்டத்தில் மொத்தம் 33 கேள்விகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது.
சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் களப்பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் முதன்மை பணியாளர்களுக்கான பயிற்சி முகாமை தொடங்கி வைத்த நிகழ்வில் அவர் இதை கூறினார். இந்த முகாம் மே 21 வரை நடைபெறுகிறது.
ஆன்லைனில் பதிவு செய்யும்போது முதலில் மொழி தேர்வு, குடும்பத் தலைவரின் பெயர் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும் என்றும், ஒருமுறை பதிவு செய்த பின் அவற்றை மாற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்தார். சேகரிக்கப்படும் தனிநபர் விவரங்கள் பாதுகாப்பாக காக்கப்படும் என்றும் கூறினார்.





