சென்னை: முதல்வர் விஜயின் அமைச்சரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதன் இடம்பெற உள்ளதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதல்வராக பொறுப்பேற்றார். தேர்தலுக்குப் பிறகு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு, தனது வாக்குறுதியின்படி அமைச்சரவையில் இரண்டு இடங்களை வழங்க அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் அண்மையில் இதை உறுதிப்படுத்தியிருந்தார். இதையடுத்து, தற்போது உள்ள காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்களில் இருவரை அமைச்சர்களாக தேர்வு செய்வது குறித்து தவெக தலைமையும் காங்கிரஸ் மேலிடமும் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த ஆலோசனையின் தொடர்ச்சியாக, ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு அதிகம் என வட்டாரங்கள் கூறுகின்றன. இது உறுதியாகும் பட்சத்தில், 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.