சமீபத்தில் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சந்தித்த தோல்விக்கான காரணங்களை கண்டறிய கட்சிக்குள் கள ஆய்வு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் 36 பேர் கொண்ட குழுவை அமைத்து, 234 தொகுதிகளிலும் நேரடி ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளார்.
கட்சியின் நிர்வாகிகள் கூறுவதன்படி, ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு பேர் வீதம் சென்று ஆய்வை தொடங்கியுள்ளனர். தொண்டர்களின் கருத்துகள் மற்றும் தோல்விக்கு வழிவகுத்த காரணிகளை அவர்கள் சேகரித்து தொகுத்து வருகின்றனர்.
இந்த விசாரணை 14 கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகிறது. வேட்பாளர்களிடம் காணப்பட்ட குறைபாடுகள், உட்கட்சி பிரச்னைகள், மக்கள் மனநிலை, வெற்றி வாய்ப்பு ஏன் கைவிட்டது போன்ற அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
விசாரணை நடைபெறும் போது மாவட்ட செயலர்கள், வேட்பாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருக்கக் கூடாது என கட்சி தலைமை முன்பே அறிவுறுத்தியுள்ளது. தினசரி ஆய்வு முடிந்ததும் அதே நாளில் தொகுதி அறிக்கையை தயாரித்து, அந்த இரண்டு பேரும் தனித்தனியாக குறிப்புகளை வழங்க உள்ளனர்.
சேகரிக்கப்பட்ட தகவல்களை ஒருங்கிணைத்து அடுத்த மாதம் 5ம் தேதிக்குள் அறிக்கையாக தயாரித்து ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கள ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் கட்சியில் தீவிர மறுசீரமைப்பு மற்றும் அதிரடி மாற்றங்கள் குறித்து முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.




