அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்குமாறு அமலாக்கத்துறை (ED) தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
2011–2016 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் அமைச்சர் பதவி வகித்த போது, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடமிருந்து பணம் பெற்றதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கு இணையாக, சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. அந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் உள்ளிட்ட சிலரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் 2023-ல் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, சில மாதங்களுக்குப் பிறகு ஜாமினில் வெளியே வந்தார்.
திமுக ஆட்சியில் அவர் அமைச்சராக இருந்த காரணத்தால், அவருக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க மாநில அரசின் அனுமதி தேவைப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முன்பும் கடிதம் அனுப்பியபோதும் தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசு அமைந்துள்ள சூழலில், மீண்டும் அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. தேவையான ஆதாரங்கள், ரகசிய தகவல்கள் மற்றும் புகார் ஆவணங்களை தமிழக தலைமைச் செயலருக்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





