புதுடில்லி: மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவும் சூழல் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் எப்போது உயர்த்தப்படும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேற்காசியப் போர் சூழலால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, இழப்பை சமாளிக்க முடியாமல் எண்ணெய் நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில், மே 15 அன்று நாடு முழுவதும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.14 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.3.11 உயர்த்தப்பட்டது.
மீண்டும் விலை உயர்வு வரலாம் என்ற தகவல்கள் பரவிய நிலையில், மேற்காசிய நிலவரம் குறித்து அமைச்சகங்களுக்கிடையேயான ஆலோசனைகள் டில்லியில் நடைபெற்றதாகவும், அதன் பின்னர் செய்தியாளர்களிடம் இணைச் செயலர் சுஜாதா சர்மா விளக்கம் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நிதிச் சுமையை எதிர்கொள்வதால், அடுத்த விலை மாற்றம் எப்போது வரும் என்பதை உறுதியாக கூற முடியாது என்றார்.
அதேசமயம், இந்தியாவில் போதுமான அளவு கச்சா எண்ணெய் இருப்பு உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அவர் கூறினார். அத்தியாவசிய எரிபொருட்களின் விநியோகம் சீராக நடைபெறுவதால், எல்.பி.ஜி. சிலிண்டர் விநியோகஸ்தர்கள், சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் தேவையற்ற பயம் வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
நாடு முழுவதும் தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறிய அவர், மின்சார அடுப்பு போன்ற மாற்று சமையல் முறைகளை பின்பற்றுவது பயனுள்ளதாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.




