இந்தியா நக்சல் இல்லாத நாடாக மாறிவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். 1971 முதல் 2026 மார்ச் 31 வரை நாடு நக்சலிசத்தின் தாக்கத்தை எதிர்கொண்டதாகவும் அவர் கூறினார்.

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பேசிய அவர், ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினரின் தியாகங்களால் இந்த நீண்ட போராட்டம் முடிவுக்கு வந்ததாக குறிப்பிட்டார். 50 ஆண்டுகளாக நீடித்த ரத்தக் களரி, அச்சம் மற்றும் வளர்ச்சி முடக்கம் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

கடந்த 50 ஆண்டுகளின் இழப்பை அடுத்த 5 ஆண்டுகளில் சரிசெய்யப்படும் என அமித் ஷா உறுதியளித்தார். மேலும், சரணடைந்த மாவோயிஸ்டுகள் வன்முறையை கைவிட்டு கண்ணியத்துடன் சமூகத்தில் இணைவதற்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

2047க்குள் இந்தியாவை முழுமையாக வளர்ச்சி அடையச் செய்வதை பிரதமர் நரேந்திர மோடி இலக்காக நிர்ணயித்துள்ளதாகவும், அதற்கான அடிப்படை வசதிகளை உள்துறை அமைச்சகம் உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். சாலைகள், ஊரக வளர்ச்சி, வங்கிகள், தபால் நிலையங்கள், எரிவாயு சிலிண்டர்கள், ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் நீர், இலவச உணவு தானியங்கள், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும் என அவர் கூறினார்.

சத்தீஸ்கர் முதல் ஜார்க்கண்ட், பீஹார் மற்றும் தெலுங்கானா வரை நக்சல்களின் கோட்டைகள் பல முக்கிய நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்புப் படையினரால் துடைத்தெறியப்பட்டதாகவும் அமித் ஷா கூறினார்.