கோதன்பர்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், வர்த்தகம் மற்றும் கலாசார பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா–ஸ்வீடன் ஒத்துழைப்பை விரிவாக்க இரு நாடுகளும் கூட்டாக அறிவித்துள்ளன.
மேற்காசியா மற்றும் ஐரோப்பாவில் நடைபெறும் அரசு முறை பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி ஸ்வீடன் சென்றார். கோதன்பர்க் விமான நிலையத்தில் ஸ்வீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் நேரில் வரவேற்றார்; புலம்பெயர்ந்த இந்தியர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த சந்திப்பில் ஸ்வீடன் இளவரசி விக்டோரியாவும் பங்கேற்றார்.
இரு தரப்பு உறவுகளை ஆய்வு செய்த தலைவர்கள், பொருளாதாரம் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை இரட்டிப்பாக்க இலக்கை நிர்ணயிக்கவும் ஒப்புக்கொண்டனர். ஐ.நா. சபை சீர்திருத்தங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட உலகளாவிய பிரச்னைகளும் பேசப்பட்டன.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்ததற்காக ஸ்வீடனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். மேலும், இந்தியா–ஸ்வீடன் உறவில் அவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, ஸ்வீடனின் மிக உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆப் தி போலார் ஸ்டார்’ (டிகிரி: கமாண்டர் கிராண்ட் கிராஸ்) விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
பயணத்தின் முக்கிய முடிவுகளாக, இந்தியா–ஸ்வீடன் உறவு ‘வியூகக் கூட்டாண்மை’ என்ற அடுத்த கட்ட அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டது. 2026–2030 காலக்கட்டத்திற்கான கூட்டு அறிக்கை மற்றும் கூட்டு திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ‘இந்தியா–ஸ்வீடன் கூட்டு கண்டுபிடிப்பு கூட்டாண்மை 2.0’ திட்டம் தொடங்கப்பட்டு, இணையவழி ‘இந்தியா–ஸ்வீடன் கூட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம்’ அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது; இது ஏ.ஐ., 6ஜி, குவாண்டம் கம்ப்யூட்டிங், தாதுக்கள், விண்வெளி ஆராய்ச்சி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஸ்மார்ட் சிட்டிகள், நீர் மேலாண்மை ஆகியவற்றிலும் கவனம் செலுத்தும். மேலும் ‘இந்தியா–ஸ்வீடன் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு வழித்தடம்’, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில் ‘இந்தியா–ஸ்வீடன் சிறுதொழில் மற்றும் ஸ்டார்ட்-அப் தளம்’, மற்றும் ‘விகாஸ் பி விராசத் பி’ கருப்பொருளில் ‘தாகூர்–ஸ்வீடன் விரிவுரை தொடர்’ தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.





