திருவனந்தபுரம்: மே 18 அன்று பதவியேற்ற கேரள முதல்வர் வி.டி. சதீசன், பதவியேற்ற சிறிது நேரத்திலேயே நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகளை அறிவித்தார்.

பெண்களின் நிதிச் சுமையை குறைக்கும் நோக்கில், கேரளா முழுவதும் பணிபுரியும் பெண்கள் ஜூன் 15 முதல் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது.

மேலும், மாநிலத்தில் வேகமாக அதிகரித்து வரும் முதியோர் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, மூத்த குடிமக்கள் நலனுக்கான தனித் துறையை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சுகாதார அமைப்பில் முன்னணியில் பணியாற்றும் ஆஷா பணியாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அவர்களுக்கான மதிப்பூதியம் ரூ.3,000 உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதேபோல், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இருவருக்கும் தலா ரூ.1,000 சம்பள உயர்வு வழங்கப்படும். பள்ளி சமையல்காரர்கள் மற்றும் மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கும் கூடுதலாக ரூ.1,000 சம்பள உயர்வு வழங்கப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்.