ஐஸ்லாந்துடன் இந்தியாவின் வர்த்தகமும் முதலீட்டுத் தொடர்புகளும் புதிய வேகம் பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஓஸ்லோவில் நடைபெற்ற 3வது இந்தியா–நார்டிக் உச்சி மாநாட்டின் ஓரமாக, ஐஸ்லாந்து பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாடோட்டரை அவர் சந்தித்து பேசிய பின்னர் இதை கூறினார்.

இந்த உச்சி மாநாட்டில் நார்வே, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே ஆகிய நாடுகளுக்கும் சென்றுள்ளார்; நெதர்லாந்துடன் இந்தியா 17 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எக்ஸ் பதிவில், ஐஸ்லாந்துடன் உள்ள நட்புறவை இந்தியா மதிப்பதாக கூறிய பிரதமர், மீன்வளம், புவிவெப்ப ஆற்றல், கார்பன் சேமிப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்ததாக தெரிவித்தார்.

மேலும் கடல் மற்றும் கடலோர வளங்களை சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளை குறிக்கும் ‘நீல பொருளாதாரம்’ துறையில் ஐஸ்லாந்தின் வல்லமை குறிப்பிடத்தக்கது என கூறினார். இந்தியா–ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்பு (EFTA) மற்றும் வர்த்தம் மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (TEPA) மூலம் வர்த்தகமும் முதலீட்டும் மேலும் ஊக்கமடையும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.