விஜயவாடா: நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி சார்பை குறைக்கும் நோக்கில், பெட்ரோலில் எத்தனால் கலக்கும் விகிதத்தை தற்போது உள்ள 20 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

மேற்காசியாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் பின்னணியில் சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதாகவும், நாட்டின் எரிபொருள் தேவையில் சுமார் 80 சதவீதம் இறக்குமதியை சார்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சமீபத்தில் டெல்லி சென்ற நாயுடு, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை சந்தித்து இது குறித்து பேசினார். பிரேசில் போன்ற நாடுகளில் எத்தனால் கலப்பு விகிதம் அதிகமாக உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தவும் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி சுமையை குறைக்கவும் கலப்பு விகிதத்தை உயர்த்த வேண்டும் என்றார்.

தற்போதைய எத்தனால் கலப்பு திட்டம் மூலம் ரூ.1.1 லட்சம் கோடி அளவிலான அன்னிய செலாவணி சேமிக்கப்பட்டதுடன், 500 லட்சம் டன் கார்பன் உமிழ்வு குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த முயற்சியின் மூலம் நாடு முழுதும் விவசாயிகள் சேர்ந்து ரூ.87,558 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக கூறி, கலப்பு விகிதம் உயர்ந்தால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் என்றார்.

எத்தனால் உற்பத்தியில் மக்காச்சோளம் முக்கிய மூலப்பொருளாக இருப்பதால் அதன் தேவையும் அதிகரிக்கும் என நாயுடு கூறினார். ஆனால் மக்காச்சோள விவசாயிகளுக்கு குவின்டாலுக்கு ரூ.2,400 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கவில்லை என்றும், விவசாயிகளின் நலனையும் நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு கலப்பு விகித உயர்வு குறித்து மத்திய அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.