நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த கோச்சிங் சென்டர் நிறுவனர் சிவராஜ் ரகுநாத் மோடேகோன்கரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வான நீட், மே 3 அன்று நாடு முழுவதும் நடைபெற்றது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து 22 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வை எழுதினர். தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, இந்தாண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, முறைகேடு குறித்து சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணையின் ஒரு பகுதியாக மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், டில்லி உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.ஐ. குழுக்களாகப் பிரிந்து சோதனைகள் நடத்தி வருகிறது. இதற்கு முன் நாசிக்கைச் சேர்ந்த சுபம் கைர்னார், ராஜஸ்தானைச் சேர்ந்த தினேஷ் பிவால், மங்கிலால் பிவால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் வினாத்தாள் தயாரிப்பு குழுவுடன் தொடர்புடையதாக கூறப்படும் புனேவைச் சேர்ந்த முன்னாள் வேதியியல் பேராசிரியர் குல்கர்னி மற்றும் பேராசிரியை மனிஷா மாந்தாரே ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், லத்தூரில் செயல்பட்ட ரேணுகாய் பயிற்சி வகுப்பில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. இதில், அதன் உரிமையாளர் சிவராஜ் தேர்வு நடைபெறுவதற்கு 10 நாட்கள் முன்பே வினாத்தாளை விலைக்கு வாங்கி, அதை மாணவர்களுக்கு கசிய விட்டதாக உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மே 3 தேர்வுக்கான வினாத்தாள் நகல் அவரது மொபைல் போனில் இருந்ததாகவும், அந்த போன் பறிமுதல் செய்து தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மாணவர்களுக்கு வினாத்தாளும் விடைகளும் கையால் எழுதிக் கொடுக்கப்பட்டதாகவும், தேர்வு முடிந்த மறுநாள் தொடர்புடைய தடயங்களை அழித்ததாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் சோதனைகள் தொடர்வதால் கைது எண்ணிக்கை மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.