பெரியாறு புலிகள் காப்பகத்தில் இருந்து தப்பிய ஆண் புலியை பிடிக்க கேரள வனத்துறையினர் தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். 20 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து முயன்றும் புலி கூண்டில் சிக்காததால் கண்காணிப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மூணாறு அருகே மறையூர் பகுதியில் கால்நடைகளை கொன்றதாக கூறப்படும் இந்த புலி, முன்பு கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது. அதன் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்ட பின்னர், கடந்த மார்சில் பெரியாறு காப்பகத்தில் விடப்பட்டு வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

கடந்த மாதம் புலி காப்பகத்தை விட்டு தப்பியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ரேடியோ காலர் சிக்னலும் கிடைக்கவில்லை. இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் தொடங்கியது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கண்காணிப்பு குழு அவசர ஆலோசனைக் கூட்ட முடிவின் அடிப்படையில், மீண்டும் கூண்டு வைத்து பிடிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஏப். 28 அன்று இடுக்கி மாவட்டம் தங்கமலை மூலக்கயம் அருகேயுள்ள தேயிலை தோட்டப் பகுதியில் இருந்து ரேடியோ காலர் சிக்னல் கிடைத்ததாக கூறப்படுகிறது. உதவி கள இயக்குனர் லட்சுமி தலைமையில் வனத்துறையினர் அங்கு முகாமிட்டு, மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கூண்டுகள் வைத்தனர். 100 மீட்டர் சுற்றளவில் ஆயுதம் ஏந்திய வனக் காவலர்கள் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆனால் புலி கூண்டில் சிக்கவில்லை; மேலும் சிக்னலும் மீண்டும் கிடைக்காததால் தேடுதல் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் உலா வருகிறதா அல்லது வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதா என்பதை கண்காணித்து வருவதாகவும், மக்கள் இரவில் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது.