காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, இந்திய பொருளாதாரத்தில் ‘புயல்’ வீசப்போகிறது என்றும், அதன் முழுப் பாதிப்பையும் சாமானிய மக்கள் தான் சுமக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி மாற்றியமைத்ததாக கூறப்படும் பொருளாதாரக் கட்டமைப்பு அதானி, அம்பானி போன்றோருக்கு சாதகமாக உருவாக்கப்பட்டதாகவும், அது நீடிக்காது என்றும் குற்றம்சாட்டினார்.
இந்த அமைப்பு சரிந்து விழப்போவது உறுதி என கூறிய ராகுல், வரவிருக்கும் பொருளாதார தாக்கம் உத்தரப் பிரதேசத்தின் இளைஞர்கள் மற்றும் மக்களை அதிகமாகப் பாதிக்கும் என்றார். விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில் நடத்துபவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்; ஆனால் அதானி, அம்பானி மற்றும் பிரதமர் மோடிக்கு பாதிப்பு இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாகக் காணாத அளவிலான பெரிய தாக்கம் ஏற்படும்; கடினமான காலகட்டம் எதிர்நோக்கி உள்ளது எனவும் அவர் கூறினார். மேலும், பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துவதாக கூறிய பிரதமர், தானே உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருவதாகவும் ராகுல் விமர்சித்தார்.





