பிஎம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், அரசின் கொள்கையில் “சமரசம்” என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மே 20 காலை 9.30 மணிக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றார்.
கல்வி நிதி தொடர்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு கல்விக்கான நிதியை வழங்கவில்லை என்றும், அது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அமைச்சர் கூறினார். எந்த மறைமுக அழுத்தத்திற்கும் அரசு அடிபணியாது என்றும் அவர் தெரிவித்தார்.
மாணவர் நலன் குறித்து, பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாவிட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். மாணவர்களின் பாதுகாப்பில் குறைப்பாடுகள் இருந்தால் சமரசமின்றி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், ஆசிரியர்களின் பிரச்னைகள் பேசி தீர்க்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பொது நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.





