சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் (உபா) கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கும் ஜாமின் வழங்கும் பொதுவிதிகள் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 21 மற்றும் 22வது பிரிவுகளிலிருந்து உருவான “பிணையே விதி; சிறை விதிவிலக்கு” என்ற கோட்பாட்டை நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியது.
இந்த கருத்து, ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த சையத் இப்திகார் அந்த்ராபியின் ஜாமின் மனுவை விசாரித்தபோது முன்வைக்கப்பட்டது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியளித்தல் தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அவரை 2020ல் கைது செய்ததாக கூறப்படுகிறது. விசாரணை தொடங்காத நிலையில், அவர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக முன் விசாரணை சிறைவாசத்தில் இருந்தார்.
நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2021ல் வந்த கே.ஏ. நஜீப் தீர்ப்பை மேற்கோள் காட்டி, விசாரணை தாமதம் மற்றும் நீண்ட முன் விசாரணை சிறைவாசம் ஆகியவை ஜாமினுக்கான காரணங்களாக ஏற்கப்பட்டுள்ளதை நினைவூட்டியது. மேலும், 2020 டில்லி கலவரம் தொடர்பாக உபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் வழக்குகளில் ஜாமின் மறுத்த இரண்டு நீதிபதிகள் அமர்வின் உத்தரவை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தது.
இந்திய அளவில் உபா வழக்குகளில் தண்டனை விகிதம் 2% முதல் 6% வரை மட்டுமே என்றும், ஜம்மு-காஷ்மீரில் அது 1%க்கும் கீழ் என்றும் அமர்வு குறிப்பிட்டது. இதன் பின்னணியில், அந்த்ராபிக்கு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி, பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும், 15 நாட்களுக்கு ஒருமுறை உள்ளூர் காவல் நிலையத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டது.





